Sulur Library

சில நாட்கள் முன்பாக, குக்கூவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் விஜயகுமார் அண்ணனும் அவருடைய துணைவியும் பேசினார்கள். குக்கூவின் பயணத்தில் இருபதாண்டுகளுக்கும் மேலாக விஜயகுமார் அண்ணன் இணைந்திருக்கிறார். சூலூரில் அவர் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு நூலகமும், கற்றல் மையமும் நிறுவ வேண்டும் என்ற விருப்பத்தை அந்தத் தொலைபேசி அழைப்பில் தெரியப்படுத்தினார்கள். குழந்தைகளுக்கான நூலகங்களை அமைத்தல்தான் குக்கூவின் முதற்துவக்கம். ஆகவே, மிகுந்த மகிழ்வோடும் பெறுப்போடும் அப்பணியைக் கையிலேற்றோம். கற்றலகமும் நூலகமும் அமைப்பதற்கான பணிகள் சிறுகச்சிறுகத் துவங்கின.

‘பறவையை நேசித்த மலை’ சிறார் கதையானது குக்கூவின் பயணத்தில் பெரும் அதிர்வை உருவாக்கிய கதை. அக்கதையை அறிந்துகொண்ட பிறகு நிறைய குழந்தைகள் இப்பூமிக்கான சாட்சியானவர்களாக மாறிநிற்பதை நாங்கள் கண்கூட நேருற்றிருக்கிறோம். தன்னந்தனியாக வறண்டு கிடக்கும் ஒரு மலை, ஒரு பறவையின் வருகை நிகழ்ந்தபிறகு எதுவாக மாறிப்போகிறது என்பதை உயிர்ப்புமிகு ஓவியங்களால் உணர்த்தும் கதை. அதன் ஓவியங்கள் உலகளவில் எல்லா தேசத்துக் குழந்தைகளுக்கும் அகவியப்பளிப்பவை.

ஆகவே, அந்தப் பள்ளிக்கூடத்தின் தரைத்தள அறையானது நூலகத்திற்கும் கற்றலகத்திற்கும் தேர்வுசெய்யப்பட்டது. அந்த அறையின் உட்சுவர் முழுக்க பறவையை நேசித்த மலை கதைக்காட்சிகளை அதே பாணியில் ஓவியங்களாக வரையத் தீர்மானித்தோம். ஓவியர் விஜி மற்றும் அவருடைய நண்பர்களின் பேருதவியில், ஒருமாத கால உழைப்பின் விளைவாக அந்த ஓவியக்கதையை நூலகச்சுவர்களில் வரைந்து முடித்தோம். சுவர்களுக்கு உயிர்ப்பைக் கொணர்ந்த அந்தத் தூரிகை மனிதர்களின் அர்ப்பணிப்பு இதில் அளப்பரியது.

கிட்டத்தட்ட, ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள, தேர்ந்த தரமிகு புதிய புத்தகங்கள் மற்றும் புத்தக அடுக்குகள் இந்நூலகத்தில் இருப்படைந்துள்ளது. ஒரு புத்தர் சிலை, சின்னதொரு மீன்தொட்டி, விதவிதமான கள்ளிச்செடிகள் என கலைத்தன்மை நிறைந்த நூலகமாக அது முழுமைபெற்றுள்ளது. இரு கைகளும், கால்களும் இல்லாத அருள்மனிதர் ‘கிருஷ்ணமூர்த்தி’ அவர்கள் துதிப்பாடல் பாடி இந்நூலகத்தைத் துவங்கிவைத்தார். ஜான் சுந்தர் அண்ணா அகலில் ஒளியேற்றி இந்நிகழ்வுக்கு ஆசிகூர்ந்தார். கோபி அவர்களின் பாண்டிச்சேரி யாழ் நாடகக்குழுவினரின் ‘மீன் வாங்கலையோ மீன்’ நாடகம் குழந்தைகள் முன்பு நிகழ்த்தப்பட்டது.

நம்மாழ்வாரின் அகத்தீவிரத்தை உள்வாங்கிக்கொண்டு வாழ்வு செலுத்தும் செஞ்சோலை செந்தில்குமரன், திருமூலர் சத்துமாவு தங்கவேல், நூற்பு சிவகுருநாதன், சண்முகராஜா அண்ணன் உட்பட நிகழ்வுக்கு வந்திருந்த எல்லா நண்பர்களின் ஒருமித்த நல்லிருப்பாலும் பகிர்வுழைப்பாலும் நிகழ்வு இனிதுற நிகழ்ந்தது. சூலூர் பள்ளிக்கூடத்தில் நூலகமும் கற்றலகமும் ஒருங்கேயமைந்த இந்த முயற்சி சாத்தியமடைவதற்கு முழுக்காரணம் விஜயகுமார் அண்ணனின் தீராத அகத்தவிப்புதான்.

தற்சமயம் பள்ளிகள் துவங்கப்பட்டு கல்வி பயிற்றுவித்தல் நிகழத் துவங்கியிருக்கும் சூழலில், சூலூர் பள்ளியில் பயிலும் குழந்தைகள் நூலகத்தை சிறப்புற பயன்படுத்தும் வகையில் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் கவனம்கொடுத்து ஈடுபாடு காட்டுவது நிறைந்த மகிழ்வளிக்கிறது. ஒரு மனிதரில் உதித்த நற்கனவு, எத்தனையோ குழந்தைகளுக்கான வாசிப்பு விருப்பத்தைத் தூண்டி சுடரச் செய்வதாக அமைந்திருக்கிறது. சூலூர் பள்ளியில் இத்தகையதொரு நூலகம் அமைந்த துணைநிற்ற அத்தனை மனிதர்களுக்கும் இதன் நல்லதிர்வுகள் அகமடையும்!

நூலகப் புத்தகங்கள் குழந்தைகளுக்கு கனவுகளை அளிக்கின்றன; இயல்புக்கு ஒத்திசையும் இலக்குகளைத் தெளிவாக்குகின்றன; வரலாறு குறித்தும், வாழும் பூமி குறித்தும் அடிப்படைப் பார்வையைப் புலப்படுத்துகின்றன. சகமனிதனுடன் சமமடைவது என்ற பெருங்கற்றலைத் தோற்றுவிக்கிறது. இதுபோன்ற முயற்சிகளை நாம் எதிர்காலத்திற்கு ஆற்றவேண்டிய அறக்கடன் என்றே எண்ண வேண்டியதாகிறது.

சூலூர் நூலகத்திறப்பு நிகழ்வினை ஒளிப்படங்களாகக் காட்சிப்பதிந்த தோழமைகள் வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், மோகன் தனிஷ்க், மனோ ஆகியோருக்கு நெஞ்சார்ந்த அன்புத்தழுவல்கள்! எந்நாளும் நினைவுள் எஞ்சும் ஓர் நற்பணியைக் கரமளித்த காலத்தின் கருணைக்குத் தீராநன்றிகள்! 

Scroll to Top