Arachalur Library

நம்பிக்கைச் சுமந்து இந்நூலகத்தின் தரையைவிட்டு ஒரு சிறுவன் எழுவான்

இலக்கியவாதி கு.அழகிரிசாமி நூற்றாண்டு துவங்குகையில் அவரை மனமேந்தும் பொருட்டு ஒருவருட கால செயற்திட்டங்களை வகுத்தோம். கு.அழகிரிசாமியின் தேர்ந்தெடுத்த படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக்கி அதை விலையில்லா பிரதியாக ஆயிரம் நண்பர்களுக்கு அனுப்புவது, அவரது உருவச்சிலை நிறுவுவது என அத்திட்டம் ஒன்றடுத்து ஒன்றென நிகழ்ந்தது. இறுதியாக, அறச்சலூர் அரசுப்பள்ளியில் கு.அழகிரிசாமி நினைவு நூலகம் ஒன்றைத் திறப்பது பெருவிருப்பமாக மனதில் எழுந்தது. இச்செயற்திட்டத்தின் கனிந்த நிறைவாகவும் அச்செயல் அமையக்கூடும் என்பதால் நண்பர்கள் இணைந்து அதை நிகழ்த்த ஆயத்தமானோம். நூலகத்தின் வெளிப்புறம் அமைந்துள்ள முப்பதடிச் சுவற்றில் செவ்விலக்கிய ஞானிகளான தஸ்தாயேவ்ஸ்கி மற்றும் டால்ஸ்டாயின் ஓவியத்தை வரைவது, ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பயிலும் அப்பள்ளியில் அனைவரும் வாசிக்கும் விதத்தில் எல்லா தலைப்புகளும் உள்ளடங்குமாறு புதிய நூல்களைத் தேடித்தேடி திரட்டுவது என செயற்பணிகள் தீவிரமாக நிகழ்ந்தன. நூலகத்தின் உள்ளறைச் சுவற்றில், அந்தப் பிராந்தியத்தில் வாழ்கிற வண்ணத்துப்பூச்சிகளின் ஓவியங்கள் வரையப்பட்டன. அறைக்குள் உயிர்களை சிறகடிக்கவைத்த அவ்வோவியர்களை நெஞ்சார இக்கணம் வணங்குகிறோம். வெவ்வேறு ஊர்களிலிருந்து கிளம்பிவந்து, பத்துநாட்கள் அப்பள்ளியிலேயே தங்கிப் பணிசெய்த அந்நண்பர்களின் இரவுபகல் பாராத உழைப்பு இச்செயலை நிறைவேற்றத் துணைநின்றது. எல்லா பணிகளும் உரியகாலத்தில் நிறைவடைந்து பள்ளிநூலகம் திறப்படையத் தயாரானது. அறச்சலூர் அரசுப்பள்ளி ஆசிரியராக வாழ்ந்து பல பரிசோதனைத் திட்டங்களை உருவாக்கி செயற்புரிந்து, ஆயிரமாயிரம் மாணவர்களை தாழ்வுணர்ச்சியில் இருந்து மீட்டவவரும், இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெண் பிள்ளைகளுக்கான கழிப்பறையில் நாப்கின் பெட்டி வைத்தவரும், எத்தனையோ மனங்கள் வணங்கும் ‘கக்கூஸ்வாத்தி’யுமான ஒ.வி.சரவணக்குமார் அவர்கள் நூலகத்தைத் திறந்துவைத்தார். சிற்பி கோவில்பிச்சை பிரபாகர் வனைந்த கு.அழகிரிசாமி உருவச்சிலையை பெருமதிப்புமிகு எழுத்தாளர் யூமா வாசுகி அவர்கள் திறந்துவைத்தார். கண்பார்வையற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பாடப்புத்தகளையும் இலக்கிய நூல்களையும் பிரெய்லி அச்சுவடிவில் உருவாக்கியளிக்கச் செயலாற்றும் தோழமை மகாலிங்கம் அவர்கள் தீபமேற்றி இந்நிகழ்வுக்கான இறையாசியை வேண்டினார். மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மரபுக்கலைகளைக் கற்றுத்தந்து அவர்களை உலகமெங்கும் அனுப்பி பாராட்டைப் பெற்றுத்தருகிற ‘கலைத்தாய் அறக்கட்டளை’யின் குழந்தைகளும், அதன் வழிகாட்டி ஆசிரியர் மாதண்ணனும் உருவாக்கிய அதிர்வென்பது நிகழ்வுக்கான நிறைதலைப் பன்மடங்காக்கியது. சிறார் நாடகக்கலைஞர் வேலுசரவணன் அவர்களின் நாடகம் என்பது எத்தனைக் காலம் கழிந்தும் நம்மை குழந்தையாக்கும் நிலைவடிவம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே அறச்சலூர் பள்ளியில் ஒரு மரத்தடியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சூழ அவர் நாடகம் நிகழ்த்தினார். இத்தனை ஆண்டுகள் கடந்து, நூலகத் திறப்பு விழாவில் அத்தனைக் குழந்தைகள் மத்தியில் அவர் தனது மாயவுலகத்தை நிகழ்த்தினார். சிறியவர்கள் முதல் வளர்ந்தவர்கள் மனது வரை மகிழும்படியாக அந்நாடகம் மந்திரவடிவம் கொண்டிருந்தது. எல்லாவகையிலும் வாழ்வின் நினைவுக்குள் நிலையாகப் படியும்படி இந்நிகழ்வு அமைந்தது. முப்பது வயதாகியும் இன்னும் சிறப்புக் குழந்தையாகவே வாழும் கண்ணன் என்னும் நண்பர் கு.அழகிரிசாமி சிலையைத் தொட்டுத்தடவிப் பார்த்தது, கண்பார்வையற்ற ஆசிரியர் மகாலிங்கம் அச்சிலையோடுயும் நூலகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் நின்று தன் கைபேசியில் செல்ஃபி எடுத்துக் கொண்டது, எங்கிருந்தோ வந்த பொன்வண்டொன்று நூலகச் சிலைபீடத்தில் அமர்ந்தது… என ஒவ்வொரு தருணமும் உயிரில் எஞ்சுபவையாக மாறின. ஒட்டுமொத்த நிகழ்வும் அங்கிருந்தோர் அனைவருக்கும் ஆற்றலூட்டும் பெருவெளிச்சத்தை வழங்கியதாக உணர்ந்தார்கள். நூலகத் திறப்புவிழாவில் குழந்தைகள் எழுப்பிய மகிழ்வுச் சத்தங்கள் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு இதே பள்ளியின் ஒரு வகுப்பறைக் கரும்பலகையில் வரைந்து பழகிக்கொண்டிருந்த சிறுவன் பிரகாஷ்… இன்று உலகத்தரத்தில் குழந்தைகளுக்கான ஓவியங்களைப் படைக்கும் ஓவியக்கலைஞனாக மாறி நிற்கிறான். அதேபோல, இந்நிகழ்வு தந்த நல்லதிர்வாலும், இந்நூலகத்தின் பயனளிப்பாலும் அப்பள்ளியில் பயிலும் எண்ணற்ற குழந்தைகள் தங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து வெற்றிகொள்ளும் கலைஞர்களாகப் பரிணமிப்பார்கள். எழுத்தாளர் யூமா வாசுகி, சிற்பி கோவில்பிச்சை பிரபாகர், நாடகக்கலைஞர் வேலுசரவணன், அகவிழி மனிதர் மகாலிங்கம், திசைமனிதர் ஓ.வி.சரவணக்குமார், கலைத்தாய் சிலம்பக் குழந்தைகள், ஓவியன் பிரகாஷ், இசைப்பாடகி தாமரை என கலைகளின் கூட்டுமனம் வெளிப்படுத்திய அற்புத நிகழ்வாக அறச்சலூர் நூலகத்திறப்பு அகத்தில் காலத்துக்கும் நிலைக்கும். இனி வரும் ஒருவருட காலத்திற்கும் இந்நூலகத்தின் இயக்கத்தை உடனிருந்து வழிநடத்தும் ‘யான்’ நண்பர்கள், குக்கூ தோழமைகள், பள்ளிக்கூடத் தலைமையாசிரியர், ஆசரியர்கள், ஊழியர்கள், நம்ம ஊரு பூபதி அண்ணன், அறச்சலூர் பொதுசனங்கள், நிகழ்வுக்கு வந்துபோன வழிப்போக்கர்கள் என அத்தனை மனிதர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளும் நன்றிகளும் சென்றடையட்டும். ‘ஒளியைத் தருவது எதுவோ, அது எரிந்தே தீரவேண்டும்’ என்பது ஆஸ்திரிய உளவியலாளர் விக்டர் பிராங்க்லின் கூற்று. இச்சமூகத்திற்குத் தன்னாலான வெளிச்சத்தை வழங்குவதற்காக இலக்கியவாதிகளும், சிற்பிகளும், ஓவியர்களும், ஏனையக் கலைஞர்களும் அந்த எரிதழலை ஏற்றே வாழ்கிறார்கள். புறவுலகு மீதான விமர்சனங்கள் இருந்தாலும் ஒருகணம்கூட அவர்கள் மற்றவர்களைச் சாபமிட்டதில்லை. சிற்றொளியைக் காக்கப்போராடும் நடுநடுங்கும் கரங்களயுடையவர்களாக கலைஞர்கள் நீடிப்பதால் நாம் இருட்பாதைகளில் வழி அறிகிறோம். அவ்வாறு, கலைக்காகத் தங்களை முற்றளித்து வாழ்ந்த, வாழ்கிற ஆயிரமாயிரம் கலைஞர்களின் வாழ்வை வணங்கும் ஓர் நினைவிடமாக அறச்சலூர் பள்ளிநூலகம் அர்த்தம் கொள்ளும். அறச்சலூர் ஓர் சமணத்தலம். இன்னொரு உயிரின் துயர்நீக்கத் தன்னை எந்நிலைவரைக்கும் வருத்திக்கொள்ளத் தயங்காத சமணன் போல, எதிர்கால மீட்சிக்கான நம்பிக்கைச் சுமந்து இந்நூலகத்தின் தரையைவிட்டு ஒரு சிறுவன் எழுவான்! உச்சரித்து உச்சரித்து ஒரு சொல் உச்சாடனம் ஆகி மந்திரமாக நிலைகொள்வது போல, நூற்றுக்கணக்கான நண்பர்கள் நூறாயிரம் முறைகள் தங்கள் அகத்தில் காட்சிப்படுத்தும் இக்கனவும் ஓர்நாள் நிறைவேறும்.

Scroll to Top