விதைநாற்று வளர்ப்பகம் திறப்பு..

விதைநாற்று வளர்ப்பகம் திறப்பு / நம்பிக்கையின் நாள் குக்கூ காட்டுப்பள்ளி

ஒருவன் அபகரிப்பதை தடுக்க இரண்டு வழிகள்தான் இருக்கிறது. ஒன்று பதுக்குவது, இன்னொன்று பரவலாக்குவது. நமக்கான அழைப்பு இரண்டாவது... ‘பரவலாக்குவது’ – பீட்டர் அண்ணன் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு உள்ளூற்றும் வார்த்தைகள் இது.

ஒற்றைத்தலைவலிக்கு மருந்தாக பிய்த்து நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் வெற்றிலை முதல் புற்றுநோய்க்கட்டிளின் உட்கருவைத் தாக்கியழிக்கும் கனிச்சாறு வரை அத்தனை குணமாக்குதலையும் ஒரு காடுதான் இன்றுவரை நிகழ்த்திவருகிறது.

எல்லாவித தழைகளையும் தின்கிற ஆடுமாடு உள்ளிட்ட கால்நடைகளின் செரிமானத்தை சீராக்கும் பாதையோரத்து மூலிகைகளை, காயம்பட்ட மான் தேடிவந்து உண்ணும் எதிர்ப்புசக்தி தாவரத்தை, ரசாயனங்களின் நெடியால் திசைகுழம்பிப் பறக்கும் தேனீக்களை ஆற்றுப்படுத்தும் வாசனைச்செடிகளை... என உயிர்வளையத்தின் பேரியக்கமே சின்னஞ்சிறு மூலிகைச்செடிகளைச் சார்ந்தே நிகழ்கிறது.

ஜவ்வாது மலை, தன்னிடமிருந்த இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்மூலிகைகளை இழந்து, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக காப்பாற்றிவைத்திருந்த தனித்துவத்தை பறிகொடுத்துவருகிறது. வெப்பமும் குளிரும் வாட்டியெடுக்கும் அம்மலையின், நிழல்தாழ்வாரத்தில் அமைந்திருக்கும் குக்கூ காட்டுப்பள்ளி பெற்ற ஈகையின் நன்றிக்கடனாக ஒரு சிற்றசைவை துவங்குகிறது.

இந்திய தட்பவெப்பச் சூழலில் வேர்பிடித்து வளரக்கூடிய மூலிகைகளையும் மரங்களையும் சேகரித்து, அவைகளை வளர்த்துப்பெருக்கி மீண்டும் ஜவ்வாதுமலைக் காட்டுக்குள் நட்டுவைக்கும் ஒரு நீள்கனவை கையிலெடுக்கிறோம்.

புளியானூர் கிராமத்திலிருந்து காடுகளுக்குள் சென்று விறகுக்காக மரங்களை வெட்டும் மனிதர்களும், அவர்கள்தம் குழந்தைகளும் ஒன்றாக இணைந்து அதே காட்டுக்குள் மரத்தை நட்டுவைக்கப் போகிறார்கள். தாத்தா வளர்த்து அப்பா அழித்த காட்டை பேரப்பிள்ளைகள் மீட்டெடுக்கும் தாகந்தணியாத வேட்கை இது.

நோய்களுக்கான மருத்துவத்துக்கும், மலையில் செடிநடுதலுக்கும் தேவையான விதைகள், மூலிகை நாற்றுகள், மரச்செடிகள் உள்ளிட்டவைகளை வளர்த்துப்பராமரிப்பதற்கான ஜென் மூலிகைத்தோட்டம் மற்றும் விதைநாற்று வளர்ப்பகம் இவைகளை வருகிற ஜூலை 15ம் நாளன்று திறக்கவிருக்கிறோம்.

இதனை மையப்படுத்திய ஒரு ‘விதைவங்கி’யும் விதைகள் சேகரிப்புக்காக துவங்கவுள்ளது. இனி, காட்டுப்பள்ளிக்கு வந்துதிரும்பும் ஒவ்வொரு கரத்திலும் ஒரு மரக்கன்று இருக்கவேண்டும் என்ற அகநினைத்தலை இது நிச்சயம் நிறைவேற்றும் என தீர்க்கம் கொள்கிறோம்.

கர்நாடக மாநிலம் மேல்கோட்டை கிராமம் நூறுக்கும் மேலான உள்ளூர் குளங்கள் தொடரிணைக்கப்பட்டு நீர்மேலாண்மைக்கான சமகால சாட்சியாக பழங்காலம் முதல் உயிரியங்கி வருகிறது.

அக்கிராமத்தில் கைத்தறி நெசவுக்கான கருப்பையாக மாறியுள்ள ‘ஜனபடா சேவா’ சங்கத்தினை நிறுவிய காந்தியவாதி சுரேந்திர கெளலாகியின் மகன் சந்தோஷ் கெளலாகி அவர்களால் நம்முடைய இம்முயற்சி திறப்படையவிருக்கிறது.

“அய்யா, இந்தக் காட்டுக்குள்ளேயே தியானிப்பா கிடந்து வேலைசெஞ்சா, வெகுகாலத்துக்கு முன்னாடி இந்தக்காட்டவிட்டு தொலைஞ்சுபோன ஒரு பறவைக்குரலோட எதிரொலி ஒருநாள் நமக்கு கேக்கும்” என்ற பீட்டர் அண்ணாவின் சொற்கள் சாவற்றது.

Has one comment to “விதைநாற்று வளர்ப்பகம் திறப்பு..”

You can leave a reply or Trackback this post.

  1. Mr WordPress - ஜூன் 18, 2010 at 8:51 மணி Reply

    Hi, this is a comment.
    To delete a comment, just log in and view the post's comments. There you will have the option to edit or delete them.

Leave a Reply

Your email address will not be published.

Solve : *
1 + 11 =