குக்கூ கற்றல் வட்டத்தின் அடுத்த வருடத்திற்கான பயணம்…

மாலை இருள் இருள் கவிய கவிய குழந்தைகளும் பெற்றோர்களும் வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு நிறைய குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வு,ஒவ்வொரு முறையும் நிகழ்வுக்கான பதட்டம் உச்சபட்ச அளவிலேயே இருக்கும்.

பெற்றோர்களும்,குழந்தைகளும் ஏதோ ஒரு தனித்தீவிற்கு வந்ததை போல உணர்ந்திருப்பனர் என்றே தோன்றியது.அந்த விரிந்த வெளியில் வெளிச்சம் அங்கும் இங்குமாய் சிறிய புள்ளிகள் போல இருந்த குடிலினுள் இருந்து வெக்கை தாங்காமல் மக்கள் வெட்ட வெளியில் வந்து படுத்து தூங்க ஆரம்பித்தனர்.

ஆனால் இரவெல்லாம் யாரோ ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர் விடியும் வரை நிகழ்வுக்காக ஏதோ ஏதோ ஊர்களிலிருந்து. காலையில் தேநீர் அருந்திய பின் தாய்ப்பசுவினையும் கன்றுகளையும் பிரித்து செல்வது போல குழந்தைகளை மைதானத்திற்கும் பெரியவர்களை செடிகளுக்கு நீர் ஊற்றுகின்ற வேலைக்கு அழைத்துக்கொண்டோம்.பெயர் சொல்லும் தாத்தாவுடன் குழந்தைகள் தங்களை இணைத்து கொண்டார்கள்.தங்களுக்குரிய புதிய பறவையின் பெயருடன் அவர்கள் அந்த இளம் வெயிலில் துள்ளித்திரிய ஆரம்பித்தனர்.

எங்களை விட உண்மையில் நண்பர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் அனைத்து செயலுக்கும் வழிநடத்தி தைரியமளிக்கிறது,அப்படி சிறகுகள் ரவீந்திரன் அண்ணா தான் இந்த முறை இந்த நிகழ்வுக்கான ஆரம்ப புள்ளி முதல் இறுதி வரை எங்கள் கைபிடித்து வழிநடத்தினார். நான்கு குழுக்களாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) பிரிந்த குழந்தைகள் பிரியப்பட்ட பாரம்பரிய விளையாட்டை கற்று கொண்டு விளையாட ஆரம்பித்தனர்.

அவர்களின் கூட்டதிர்வு காட்டையே அதிர்வு கொள்ளத்தான் செய்தது.மறுபுறம் பெற்றோர்கள் விதை நாற்றுப்பண்ணைக்கும்,மூலிகை தோட்டத்திற்கும் அத்தனை ஆர்வமாய் அதனை பற்றி தெரிந்து கொண்டே நீர் ஊற்றினர்.ஆனாலும் பெற்றோரின் கண்கள் எல்லாம் குழந்தைகள் மேல் தான். இந்த மூன்று நாட்களும் குழந்தைகள் நிகழ்வின் போது,எந்த பெற்றோர்களையும் குழந்தைகள் இருக்கும் திசைப்பக்கம் கூட நாங்கள் அனுமதிக்க வில்லை.

குழந்தைகள் பகல் முழுவதும் தன்னார்வளர்களின் அரவணைப்பில் தான் இருந்தனர்,பிள்ளைகளும் அவர்களுடன் பசைபோல ஒட்டிக் கொண்டு புது மழை பிராவகம் போல காட்டுப்பள்ளியின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் அலைந்து திரிந்தனர்.சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இயல்பாய் இருக்கவிட்டு ஒதுங்கி கொண்டனர்.மற்ற பெரியவர்களுக்கோ ஆயிரத்து எட்டு கவலைகள் தங்கள் பிள்ளைகள் பற்றி.கொஞ்ச கொஞ்சமாய் பிள்ளைகள் பற்றிய பெற்றோர்களின் புலம்பல்களும் பெற்றோர்கள் பற்றிய பிள்ளைகளின் சலிப்புகளும் தனித்தனியே கேட்டுக்கொண்டோம். இயற்கை உணவை இயல்பாய் படைத்து வழங்கும் படையல் சிவா அண்ணன் வந்து சேர்ந்தார் தனது தங்கை அவர்களுடன்.

பெற்றோர்களுடன் அண்ணாவின் உற்சாக உரையாடல் துவங்கியது.பேச்சினுடே செயலும் செயலினுடனே பேச்சும் வழிந்தோடிக் கொண்டுஇருந்தது.தங்கள் குழந்தைகளின் உணவு குறித்த பழக்கவழக்கங்கள் அவற்றை சீர்செய்வதறகான வழிமுறைகள் மேலும் தங்களின் உடல் நலன் என பலவழிகளில் உரையாடல் நீண்டது. மதியத்திற்கு மேல் களிமண்ணால் வித விதமான பொம்மைகள் செய்ய ஆரம்பித்த குழந்தைகள் மிகுந்த உற்சாகம் கொண்டு தங்கள் முகங்களில் அவர்களுக்கு பிடித்த விதங்களில் ஓவியங்கள் வரைந்து கொண்டு அனைவருக்கும் வண்ணங்கள் பூசி கொண்டாடினர்.

இறுதியாய் மண் குளியல் குளித்து சிறிய குளத்தினுள் ஆட்டம் போட்டு கரையேறினார்கள். உண்மையில் திருமண வீடு போல,திருவிழா நடக்கும் கிராமத்து வீடு போல ஆள் ஆளுக்கு வேலைகளை பிரித்து கொண்டனர்.சிறிய குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு கூட்டம்,தண்ணீர் எடுத்து கொடுக்க,காய்கறி நறுக்கி கொடுக்க,குழந்தைகளுக்கான பரிசுப் பொருள் கொடுக்க களிமண் சிற்பம் செய்ய விடிய விடிய முழித்து கிடந்த நண்பர்கள் ஒரு பக்கம்,நிகழ்வு மொத்தத்தையும் உயிர்ப்பாய் பதிவு செய்யும் புகைப்பட கலைஞர்கள் இதுபோக வழியா,ஜோர்டான் மற்றும் கண்மணி என அனைத்து உயிர்களும் கூடி இன்பமாய் இருந்தோம்.

குக்கூகாட்டுப்பள்ளி உருவான கதையின் 10 நிமிட வீடியோ பதிவு இரவில் வெட்ட வெளியில் அனைவருக்கும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.கண்கள் விரிய விரிய குழந்தைகளின் சந்தோச முகம் எங்களை நிறைவுள்ளாக்கியது.பல்வேறு வகையான பறவைகளின் குரல்களை ஒலிபெருக்கி கொண்டு ரவீந்திரன் அண்ணா குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

மறுநாள் காலை குழந்தைகள் ஒரு திசையிலும் பெற்றோர்கள் மறு திசையிலும் காட்டிற்குள் நடைபயணம் மேற்கொண்டனர் பறவைகளின் ஒலி மட்டுமே பிள்ளைகளின் காதில் அந்த அதிகாலை முதலே கேட்டுக் கொண்டிருந்தது பறவைகள் பூச்சிகள் சில்வண்டுகள் தாவரங்கள் மூலிகைகள் மரங்கள் என உரையாடல் நீண்டு செல்ல பெற்றோர்களும் வீடு குறித்தும் சுற்றுச்சூழல் பல்லுயிர்கள் குறித்த அவர்களின் அனுபவங்களையும் உணர்ச்சிபூர்வமாக பகிரத் தொடங்கினார். பிள்ளைகள் அன்று விளையாடுவதற்காக வெயில் தன் உக்கிரத்தை குறைத்துக் கொண்டது அத்தனை சிறுவயது விளையாட்டுக்களையும் பிள்ளைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

களைத்த நேரத்தில் அள்ளித் திங்க நொங்கு வந்து சேர்ந்தது. ஒவ்வொரு வேலைக்கும் படையல் சிவா அண்ணன் இயற்கை உணவினை விதவிதமாய் பெற்றோருடன் இணைந்து செய்து கொடுக்க பறவைகள் போய் நிழல் பாவை கூத்துக்காக பொம்மைகள் செய்ய ஆரம்பித்தனர் பிள்ளைகள் கிகி என்று பிள்ளைகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிருத்திகா ஓடி ஓடி பிள்ளைகளுக்கு இந்த அழகிய எளிய கலையினை மாற்றிக் கொண்டிருந்தார்கள் இரவு மண் குடிலில் அத்தனை விளக்குகளும் கண் மூடிக் கொள்ள மஞ்சள் ஒளியில் பிள்ளைகள் தங்கள் கைகளில் உள்ள பொம்மையை ஆட்டி ஆட்டி கதை சொன்னார்கள் நாய் பூனை யானை மனிதன் என ஒவ்வொரு நிழலிலும் நிஜமாய் கதை சொல்லி மகிழ்ந்தார்கள்.அன்று வானம் கருத்து கொட்டிய மழை குழந்தைகளின் மகிழ்வின் வெளிப்பாடே.. மூன்றாம் நாள் முடிவில் காலையில் அனைவரும் சேர்ந்து இயற்கை உணவு தயாரித்து உண்டு மகிழ்ந்து புதையல் வேட்டைக்குச் சென்றனர். காட்டுபள்ளி நிலத்தின் ஒவ்வொரு அங்குல அங்குலமாக தங்களின் பரிசு சீட்டினை தேடி அலைந்து திரிந்து இறுதியில் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு தங்களின் பரிசுகள் அடங்கிய பையை கண்டுபிடித்தனர்.தங்களுக்கு விருப்பமான நண்பர்களுடன் சேர்ந்து பிள்ளைகள் புகைப்படம் எடுத்து கொண்டனர். இறுதி கூடுகை புளியமரத்தின் அடியில் கண்கலங்குதலும் நிறைவுமாய் பகிர்ந்து கொண்டனர். அனைவரும் தங்கள் பிள்ளைகளின் முகத்தில் கண்ட உற்சாகத்தினால் நெகிழ்ந்தே இருந்தனர். குக்கூ கற்றல் வட்டத்தின் அடுத்த ஒரு வருடத்திற்கான பயணத்திற்கான நல்ல துவக்கமாக இந்த தருணத்தை உணர்கிறோம்…

Leave a Reply

Your email address will not be published.

Solve : *
17 − 7 =